மஞ்சள் வெய்யிலின் நிறத்துக்கு ஈடாக நான் சாப்பிட்டுகொண்டிருந்த லெமன் சாதம் பளபளத்துக்கொண்டிருக்க,நான் அதை வெறித்தனமாக கபளீகரம்செய்து கொண்டிருந்ததை அந்த ரயிலின் உள்ள அனைத்து பயணிகளும் கண் இமைக்காமல் பார்த்துகொண்டிருந்த அந்த கண்கொள்ளா காட்சியை வர்ணிக்க எனக்கு வாய் இல்லை.அவ்ளோ பசி. வாய் முழுவதும்சாதம். தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கினது ரொம்ப சௌகர்யமாக இருந்தது.
ஒரு அரை மணி நேரமாக,மானை புலி வேட்டை ஆடுவதுபோல் நான் சங்கீதா ஹோட்டலில் வாங்கிய பார்சலை வேட்டை ஆடி கொண்டு இருந்தேன். இரவு சாப்பாடு இனிதே சுபம் அடைந்ததை கொண்டாடும் விதமாக, பையில் வைத்து இருந்தஆரஞ்சு பழச்சுளைகளை உள்ளே தள்ளி விட்டு, உலகமே அதிரவைக்கும் படியாக ஏப்பத்தை விட்டதும் தான் என்னை சுற்றி இருந்த உலகமே எனக்கு புரிந்தது. திருச்சி ஸ்டேஷன் நாளை காலை 5 மணிக்கு வரும் என்று அம்மா சொல்லி இருக்க, காலை சூரியனை கூட கண்டிராத எனக்கு ஐந்து மணிக்கு முழிப்பது என்பது பிரம்ம பிரயத்னம்.
ரயிலின் மேல் பெர்த்தில் மல்லாக்க படுத்து கொண்டு, ரயிலின் அசைவுக்கு நாம் நம்மை அர்ப்பணித்து, தூளியில் ஆட்டும் அம்மாவாக அந்த ரயிலை நினைத்து கண்களை மூடினால், இரவு பகல் அரியாது உறக்கம் நம்மை ஆட்கொள்ளும் என்பது எந்த ஓலை சுவடியிலும் எழுதப்படாத ரகசியம்!
***
விடிந்துவிட்டதென்று என்னுள் இருக்கும் எதோ ஒரு இன்ஸ்டின்க்ட் உறுத்தியதால், மெல்ல கண்களை திறந்து பார்த்ததில் மணி நாலரை ஆகி இருந்தது. மேல்ல பெர்த்திலிருந்து கீழிறங்கி, என் பையிலிரிந்து, டூத் பேஸ்டையும் ப்ருஷையும் எடுத்துக்கொண்டு டாய்லெட்டை நோக்கி நடையை கட்டினேன்.
தூக்கம் கலையாத கண்களும், ஆட்டத்தை நிருத்தாத ரயிலும், எனது தலையை வருடிக்கொண்டிருக்கும் வேக காற்றும் தனது வேலையை மிகச்சிறப்பாக செய்துகொண்டிருந்தது. ரயில் கம்பார்ட்மென்ட்டின் கதவருகில் இருக்கும் வாஷ் பேசினில் பல் துலக்குவது சர்வசாதரணமான வேலை இல்லை என்று மட்டும் புரிந்தது.
பல் துலக்கும் படலம் இனிதே நிறைவடைந்து இருந்தாலும் தூக்கம் மட்டும் கலைந்தபாடில்லை. அப்படியே டாய்லெட்டுக்கும் சென்று காலை கடனை முடித்துவிடலாமென கதவை திறந்த போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. என் கையில் இருந்த டூத்ப்ருஷ் அழகாக நழுவி, கக்கூஸ் போகும் அந்த ஓட்டையில் தனது இறுதி பயணத்தை மேற்கொண்டது. செய்வதறியாது திருவிழாவில் தொலைந்து போன சிறு பிள்ளைபோல் தவித்து கொண்டிருந்த அந்த சங்கடமான நேரத்தில்தான் அடுத்த சம்பவம் நிகழ்ந்தது.
ப்ருஷ் விழுந்த ஓட்டையில் இருந்து புகை மூட்டத்துடன் ஒரு ஒளி மேலெழும்பி அந்த டாய்லெட் முழுவதும் பரவிக்கொண்டது. சட்டென்று அந்த இடமே ஒரு கோவிலின் வாகன மண்டபம் போல் காட்சி அளித்தது. எதோ ஒரு திசையில் சங்கு ஒலிக்கும் சத்தம் கேக்க, அந்த ஒளியில் இருந்து ஒரு அழகான தேவதை வெள்ளை உடை அணிந்து என் கண் முன் தோன்றினாள். கையில் ஒரு ப்ருஷ் வைத்து இருந்தாள்.
“இது உன்னுடையதா?” என்று மெலிய குரலில் என்னை பார்த்து கேட்டாள்.
“இல்லீங்க இது இல்லே” னு சொன்னேன்.
கையை இரெண்டு தடவை சுத்தினதும் அந்த ப்ருஷ் கலர் மாறியது.
“இது உன்னுடையதா?” என்று மறுபடியும் கேக்க,” இல்லை இல்லை” என்று நான் பூம்பூம் மாடைப்போல் தலையை நன்றாக ஆட்டினேன். மனதுக்குள் ஒரு இனம் புரியாத சின்ன சந்தோஷம்.
மறுபடியும் கையை இரெண்டு தடவை அந்த தேவதை சுத்தினதும் அந்த ப்ருஷ் கலர் மறுபடியும் மாறியது.
“இது?” என்று மறுபடியும் கேக்க, நான் இந்த ப்ருஷும் இல்லவே இல்லை என்று சத்யவானுக்கு அண்ணனை போல் நெஞ்சை நிமிர்த்திகொண்டு நின்றேன்.
அடுத்து ஒரு தங்கத்திலான ப்ருஷை எடுத்து வருவாள் என்று ஆசையுடன் இருக்கும்போது யாரோ என் தோளை உலுக்குவது போல் இருந்தது. “சார் சார்…..” என்று உலுக்குவது வேகமாகவே கண்களை கசக்கி கொண்டு விழித்தபொது தான் தெரிந்தது நான் இன்னும் மேல் பெர்த்தில் படுத்துகொண்டிருப்பது.
கனவு கலைந்து விட்ட கோவம் ஒருபுறம் இருக்க, ரயிலே காலியாக இருந்தது ஒரு பயத்தை ஊட்டியது. சுற்றும் முட்டும் பார்த்து விட்டு கீழே கூட இறங்காமல் அவரிடம் கேட்டேன்.
“டைம் எவ்ளோ ஆச்சு சார்?”
அவர் எதோ கடன் கேட்டார் போல் முகத்தை சலித்து கொண்டு, மண்டையில் அடித்துக்கொண்டே, “மணி பத்தாகுது, வண்டியவிட்டு கீழ எறங்குங்க, கம்பார்மென்டை லாக் பண்ணனும்” என்று கூறி விட்டு பெருக்குவதை தொடர்ந்தார்.
ஐந்து மணிக்கு வரும் ஸ்டேஷனயும் கோட்டை விட்டு, வண்டி ஷெட்க்கு வந்தது கூட தெரியாமல், ஐந்து மணி நேரம் தூங்கியதற்கு காரணம் அந்த லெமன் ரைசும் உருளைகிழங்கு சிப்சும் தான் என்று நான் தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்!
***